×

ஆபத்துகளிலிருந்து காப்பவர் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர்

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ‘துக்காச்சி’ என்ற சிற்றூரின் பெயரைக் கேட்டவுடனேயே கலை, வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் சோழ மாமன்னர்களால் திருப்பணி செய்து வணங்கப்பட்ட ‘ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்’ நினைவுக்கு வரும். அருகில் உள்ள கூகூரில் இருக்கும் ஆதித்தேஸ்வரம் கோயிலில் உள்ள ராஜராஜனின் கல்வெட்டுக்கள், இவ்வூரை ‘விடேல்விடுகு துக்காச்சி சதுர்வேதமங்கலம்’ (நால்வேதம் கற்ற அந்தணர்களுக்கு தானமளித்த ஊர் – ‘சதுர்வேதமங்கலம்’) எனக்குறிப்பிடுகின்றன.

பல்லவர்களின் பட்டப்பெயரான ‘விடேல் விடுகு’ என்ற பெயர் உள்ளதால், இவ்வூர் 7-8 ஆம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பு பெற்றிருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வூர், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் “குலோத்துங்க சோழ நல்லூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, ‘திருக்காளத்திமகாதேவர்’ என்ற பெயரில் வணங்கப்பட்ட இவ்வாலய இறைவன், பின்னர் அவரது மகன் விக்கிரம சோழனால், சிற்ப சிறப்புகளுடன் பெரும் திருப்பணிகள் செய்யப்பட்டு ‘‘விக்கிரமசோழீச்வரம்’’ என பெயரிட்டழைக்கப்பட்டு, இன்று ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என வணங்கப்படுகிறார். இறைவி: சௌந்தர்யநாயகி.

இவ்வளவு வரலாற்றுப்பெருமைகள் பெற்ற இச்சிவாலயம், பின்னர் பல்லாண்டு காலமாக பராமரிப்பின்றி இடிந்த மண்டபங்கள், மரம் செடிகள் வளர்ந்து பாழ்பட்ட கோபுரங்கள், சிதைந்த சிற்பங்கள் என்ற பொலிவிழந்த நிலையில் காண்போரை கண் கலங்க வைத்தது. முற்றிலும் பழுதடைந்து, பாழடைந்த நிலையில் இருந்த இக்கோவில், பல நல் உள்ளங்களின் பெரு முயற்சிகளாலும், பொருள் ஆதரவினாலும், இன்று அழிவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டு, சிறப்பாக புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவுற்று, வரும் ஆவணி மாதம் 17ஆம் தேதி (செப்டம்பர் 3, 2023) ஞாயிறன்று திருக்குட நன்னீராட்டு விழா நிகழவுள்ளது.

‘தென் காளத்தி’ என்ற பெருமையுடைய இத்திருக்கோயில், விக்கிரம சோழனின் கனவுக்கோயிலாக சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் ஏழு திருச்சுற்றுகளுடன் அமைக்கப்பட்டது. தற்போது இரண்டு திருச்சுற்றுகளே எஞ்சியுள்ளன. அரசலாற்றங்கரையில் அமைந்த இத்தலத்தில் துர்க்கை அம்மன் இறைவனை‌வணங்கியதால், ‘‘துர்க்கை ஆட்சி’’ என்ற பெயர் ‘‘துக்காச்சி’’ என மருவியது என்றொரு கருத்து நிலவுகிறது.

கரண்ட மகுடத்துடன் கோரம் வெளிப்படும் முக உணர்வுகளுடன், எட்டு கரங்கள் கொண்டு கிழே மகிஷனை வதம் செய்யும் உக்ர வடிவில் மண்டபத்துடன் கூடிய தனிக்கோயிலில் பேரழகு துர்க்கை தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அழகிய பெரிய உருவத்தில் விநாயகர், சிங்கமுகமும் கழுகு உடலும் கொண்டு நரசிம்மரின் கோபாவேசத்தை அடக்கிய சரபமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், ஆடல்வல்லான், குபேரன், வாராகி ஆகியோரின் சிற்ப அழகியல் நேர்த்தி வியக்க வைக்கிறது.

‘பலகணி மாடம்’ அமைந்த அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம், ‘திரி தள’ கருவறை விமானம், சக்கரத்துடன் உள்ள தேர் மண்டபத்தினை யானையும் குதிரையும் இழுத்து செல்வது போன்ற அமைப்பு, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் தாங்கி நிற்கும் வசந்த மண்டபங்கள், உட்புற விதானங்களில் உள்ள சிற்ப நுணுக்கங்கள், என ஒவ்வொரு அம்சமும் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.

The post ஆபத்துகளிலிருந்து காப்பவர் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : tukachi ,adabhashakayeswarar ,Kumbakonam ,Cholam ,Dukachi ,Adabhashakayeswara ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...